×

கொரோனா அதிகரிக்கும் நிலையில் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் மாண்டவியா வலியுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை தடுக்கவும், அதை நிர்வகிக்கவும் மாநில அரசுகள் விழிப்புடனும் தயாராகவும் இருக்க வேண்டுமென ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திய நிலையில், கொரோனா தடுப்பு தயார்நிலை தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் முதன்மை, கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இதில், இன்ப்ளூயன்சா போன்ற காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்று பாதிப்புகளை கண்காணிப்பதன் மூலம் கொரோனா ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காண்பது, சோதனை மற்றம் தடுப்பூசி செலுத்துதலை அதிகரிப்பது மற்றும் மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்வது குறித்து அமைச்சர் மாண்டவியா வலியுறுத்தினார். மேலும், புதிய வகை மாறுபாடுகளை முன்னரே கண்டறிய மரபணு வரிசைமுறையை மேம்படுத்துவதோடு, தொற்று தடுப்பு மற்றும் நிர்வகித்தலில் ஒன்றிய அரசுடன் மாநில அரசுகள் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட அவர் அறிவுறுத்தினார்.

‘பரிசோதனை – கண்டறிதல் – சிகிச்சை அளித்தல் – தடுப்பூசி போடுதல் – கொரோனாவுக்கு பொருத்தமான நடைமுறையை கடைபிடித்தல்’ ஆகிய 5 அம்ச உத்தியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்திய அமைச்சர் மாண்டவியா, வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் தயார்நிலை மாதிரி ஒத்திகைகளையும் நடத்தவும், அதற்கு முன்பாக வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் சுகாதார தயார்நிலையை மறுஆய்வு செய்யவும் மாநில சுகாதார அமைச்சர்களை வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியின் கவரேஜ் குறைவான அளவில் இருந்தால் தகுதியான அனைத்து மக்களுக்கும், குறிப்பாக வயதானவர்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குமுன்னெச்சரிக்கை டோஸ் செலுத்துவதை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகள் தினசரி கொரோனா பாதிப்பு தகவல்களை கோவிட் இந்தியா இணையதளத்தில் தவறாமல் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தெலங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்கள் பங்கேற்றனர்.

  • பெரிய பாதிப்பு இருக்காது
    இந்தியாவில் கொரோனா வைரசானது எண்டமிக் கட்டத்தில் உள்ளது. அதாவது, ஒரு நோய் குறிப்பிட்ட பகுதியை விட்டு நீங்காமல் இருந்தாலும் அதன் தாக்கம் சமாளிக்க கூடியதாக இருக்கும். இதனால் தான் ஜலதோஷம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் பாதிப்புகளே இப்போது தொடர்கின்றன. இது அதிகமாக பரவினாலும், முறையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது என நிபுணர்கள் கூறி உள்ளனர்.
  • மீண்டும் மீண்டும் தொற்றுவது ஏன்?
    மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பல்வேறு வகையான ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறன் இருந்த போதிலும், கொரோனா வைரசின் ஒரே புரத பகுதியை நோய் எதிர்ப்பு மண்டலம் குறிவைத்து, ஆன்டிபாடிகளை உருவாக்குவதால், ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், கொரோனாவின் சிறிய பிறழ்வுகளால் மீண்டும் தொற்று ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கள் புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

The post கொரோனா அதிகரிக்கும் நிலையில் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் மாண்டவியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Mandavia ,New Delhi ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...